35 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இலக்கு! வைகை அணை மீன் பண்ணையில் ஏற்பாடு
மீன்வளத்துறை சார்பில் வைகை அணை மீன் பண்ணையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த மீன்குஞ்சுகள் பல்வேறு அணைகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் தனியார் மூலம் கிணறுகளில் விடுவதற்கு விற்பனை செய்யப்படுகிறது.
வளர்ப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் நுண் மீன் குஞ்சுகள் மேட்டூர், பவானிசாகர், கரூர், மணிமுத்தாறு, கரந்தை, தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு வைகை அணை மீன் பண்ணையில் உள்ள மீன் தொட்டிகளில் விடப்படுகின்றன. இங்கு 45 நாட்களில் விரலிகளாக வளர்ந்த பின் விற்பனை செய்யப்படுகின்றன. மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக தற்போது வைகை அணையில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் கவுதமன் கூறியதாவது:
வைகை அணை மீன் பண்ணையில் கடந்த ஆண்டு 35 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. தற்போதும் 3 லட்சம் எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிருகாள், சாதா கெண்டை வகை மீன் குஞ்சுகள் இருப்பில் உள்ளன. ஒரு மீன் குஞ்சு வகைக்கு தக்கபடி 45 காசு முதல் 75 காசு வரையிலான விலையில் உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் நுண் மீன் குஞ்சுகள் கொண்டுவரப்பட்டு மீன் தொட்டிகளில் வளர்ப்புக்காக விடப்படும்.
கடந்த ஆண்டு வைகை அணை நீர் தேக்கத்தில் 16 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு ஒப்பந்ததாரர் மூலம் வைகை அணை மீன் பண்ணையில் வாங்கி வளர்ப்புக்கு விடப்பட்டன. இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகள் இன்னும் ஓரிரு மாதங்களில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வைகை அணையில் விடப்படும் மீன் குஞ்சுகள் அடுத்த சில வாரங்களில் வளர்ந்து விடும்.
வளர்ந்த பின் ஒப்பந்ததாரர் கட்டுப்பாட்டில் உள்ள மீனவர்கள் மூலம் ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வைகை அணையில் பிடித்து விற்கப்படும் மீன்களுக்கு பொதுமக்கள், வியாபாரிகளிடம் வரவேற்பு அதிகம் உள்ளதால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.