மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
சின்னமனூர்: மின் மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு கோருபவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நமது அனைத்து தேவைகளுக்கும் மின்சாரம் அவசியமாக உள்ளது. புதிய வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டுமான பணிக்காக தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும். தற்போது தற்காலிக,நிரந்தர மின் இணைப்பு கோருபவர்களுக்கு மின் மீட்டர் தட்டுப்பாட்டால் உடனடி இணைப்பு கொடுக்க வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெபாசிட் செலுத்துவது, விண்ணப்பம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது என எல்லா பணிகளும் முடிந்தாலும், மீட்டர் இல்லாததால் உடனடியாக இணைப்பு பெற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளுபவர்கள் தற்காலிக மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது மீட்டர் தட்டுப்பாடு இருப்பது உண்மை தான், தனியாரிடம் வாங்கி கொள்ள அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ அந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
முன்னுரிமை முறையில் மீட்டர்கள் வழங்கி வருகிறோம். விரைவில் சரியாகி விடும் என்கின்றனர். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற இருப்பதால் மீட்டர் தடுப்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்டர்கள் வெளிமார்க்கெட்டில் நுகர்வோர்களை வாங்கி, மின்வாரியத்தில் சீல் வைத்து பயன்படுத்தலாம். இந்த நடைமுறையை அமல்படுத்த வாரியம் முன்வர வேண்டும். மீட்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தொடரும் இந்த நிலை மாற்ற வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.