பாரபட்சமின்றி கல்வி நிதி வழங்க ஆசிரியர் கழகம் கையெழுத்து இயக்கம்
தேனி : மாணவர்களின் கல்வி நிதியை பாரபட்சமின்றி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய கோரி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக முதுநிலைப்பட்டதாரி கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தேனியில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீத நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்ட நிதி ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டு தோறும் மத்திய அரசு ரூ. 2151 கோடி ஒதுக்கீடுசெய்கிறது. இந்த கல்வியாண்டிற்கான நிதி, கடந்த கல்வி யாண்டின் இறுதியில் வழங்க வேண்டிய ரூ.249 கோடி என மொத்தம் ரூ.2401 கோடி விடுவிக்கப்படாமல் உள்ளது.
இதனால் கல்வி சார்ந்து மாணவர்களின் நலன், ஆசியர்கள் ஊதியம் வழங்குவது தடைபடும் சூழல் உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். கல்விக்கான நிதியை பாரபட்சமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். அதனை ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்ப உள்ளோம் என்றார்.