Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

நெல் அறுவடை முடிந்த நிலங்களில் இயற்கை உரமேற்றும் பணி தீவிரம்

போடி: போடி மீனாட்சிபுரம் பகுதியில் நெல் அறுவடை முடிந்த வயல்களில் இயற்கை முறையில் உரம் சேர்க்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

போடி மீனாட்சிபுரம், பொட்டல்களம், விசுவாசபுரம், மேலச்சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மீனாட்சியம்மன் கண்மாயில் தொடர்ந்து நீர் தேங்கி வருவதால் ஆண்டு தோறும் ஒரு போக நெல் சாகுபடி மீனாட்சிபுரம் பகுதியில் நடைபெறும். தற்போது நெல் அறுவடை சீசன் முடியும் நிலையில் விளை நிலங்களை உழவு செய்து விதைப்புக்கு தயார் படுத்தி வருகின்றனர்.

இயற்கை உரம்: இயற்கை உரங்களால் மட்டுமே விளை நிலத்தின் உயிர் தன்மையை நிலை நிறுத்த முடியும் என்பதால், தற்போது இயற்கை உரமிட்டு வருகின்றனர். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை தங்கள் நிலங்களில் கிடை அமைத்து வருகின்றனர். இதன் சாணத்தை இயற்கை உரமேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘இயற்கை உரங்களால் மண்ணின் உயிர் தன்மை அதிகரித்து காணப்படும். ஆடு, மாடுகளின் சாணம், அதன் சிறுநீரில் மண்ணுக்கு தேவையான நைட்ரேட் உரங்கள் உள்ளன. 50 முதல் 100 ஆடுகளின் கழிவுகள் மூலம் நிலங்களில் உரமேற்றுவதால் மண்ணின் தரம் உயர்வதோடு, விளைச்சல் அதிகரிக்கும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *