மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு என்ன வகை வைரஸ் என்பதில் குழப்பம்
கம்பம்: மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து தொடர் இருமலும் இருப்பதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.
கடந்த 2019 ல் கொரோனாவிற்கு பின் புது புது பெயர்களுடன் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இரண்டு வாரமாக பனியும், வெப்பமும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஒரு வகை வைரஸ் தாக்குதலால் காய்ச்சல் பரவி வருகிறது. என்ன வகையான வைரஸ் என்பதை ரத்த மாதிரிகள் பரிசோதனையில் தான் தெரியும். காய்ச்சல் பாதித்தவர்களுக்கு 10 நாட்களுக்கு குறையாமல், தொடர் இருமலும் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் கூட்டம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக திருமணம், காதணி விழா, துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறுகையில், கடந்த 10 நாட்களாக காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. என்ன வகையான வைரஸ் தாக்கி உள்ளது என்பதை ஆய்வக பரிசோதனை மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். ஒருவரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.