Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

‘டீ ‘ தூளில் இலவம் பிஞ்சு கலப்படம்; மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்த வேண்டும்

போடி: இலவம் பிஞ்சுகளை பொடியாக்கி ‘டீ’ தூளில் கலப்படம் செய்து வருவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கேரளாவில் பூப்பாறை, குமுளி, மூணாறு பகுதியில் தேயிலை கிடைக்கிறது. தேயிலையில் தயாரிக்கப்படும்’ டீ ‘ யில் அதிகளவு இயற்கையான நறுமணமும், உடலில் நோய் எதிர்க்கும் சக்தியை உருவாக்கும்.

சுத்தமான தேயிலை டீ துாளில் துவர்ப்பு சுவையை தரும் இலவம் பிஞ்சுகளை பொடியாக்கி கலப்படம் செய்வது சமீபமாக அதிகரித்து வருகிறது. போடி, பெரியகுளம், கம்பம், வருசநாடு பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடியாகிறது. தற்போது நிலவும் பனி காரணமாக இலவம் மரங்களில் இருந்து பிஞ்சு, பூக்கள் அதிகம் உதிர்கிறது. இவற்றை கிராமங்களில் சேகரித்து வெயிலில் உலர வைக்கின்றனர். இதனை விவசாயிகள், தொழிலாளர்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.கடந்த ஆண்டு உற்பத்தி குறைந்ததால் இலவம் பிஞ்சு கிலோ ரூ.175 முதல் ரூ.200 வரை வியாபாரிகள் வாங்கினர்.

இந்த ஆண்டு பிஞ்சு, பூக்கள் உதிர்வு அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரையும், பூக்களை கிலோ ரூ. 30க்கு கொள்முதல் செய்கின்றனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பெரிய வியாபாரிகள் சில்லரை வியாபாரிகளிடம் கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரையும், பூக்களை கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். டீ துாளில் கலப்படம் தாராளமாக நடக்கிறது.

முருகன், சமூக ஆர்வலர், போடி : பனி காலத்தில் மக்கள் ‘டீ ‘ அருந்துவது வழக்கம். தரம் வாய்ந்த டீ குடிப்பதால் உடலுக்கு நல்லது உற்சாகம் கிடைக்கும். ஆனால் பல கடைகளில் தரமான டீ தூள் கிடைப்பது இல்லை. நன்கு காய்ந்த இலவம் பிஞ்சுகளை பவுடராக்கி ‘டீ ‘ தூளில் குறிப்பிட்ட சதவீதம் கலப்படம் செய்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். கலப்படத்தை அறிய ‘டீ’ தூளை குளிர்ந்த நீரில் போட்டால் உடனடியாக நீரில் கரைந்து விடும். வெள்ளை துணி, வெள்ளை தாளில் ஈரத்துடன் போட்டால் செந்நிற கரை ஏற்படும்.

பெரும்பாலான டீ கடைகளில் கலப்பட ‘டீ ‘ யை பயன் படுத்துகின்றனர். இந்த ‘டீ’ யை குடிப்பதன் மூலம் உடலுக்கு தீங்கும், வயிற்று கோளாறு ஏற்படுகின்றன.

இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *