‘அல்ட்ரா ஸ்கேன்’ பிரிவில் குடிநீர் வசதி இன்றி கர்ப்பிணிகள் அவதி
பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பிரிவில் குடிநீர் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 200 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு வார்டு 36ல் மிகை ஒலி ஆய்வு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பிரிவு இயக்கி வருகிறது. இங்கு கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர்ச்சி நிலை, கல்லீரல், மண்ணீரல், கிட்னி, வயிற்று கட்டி, நரம்புகளில் ரத்த ஓட்டம், சிறுநீரக பிரச்னைகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளுக்கு ஸ்கேன் இலவசமாக எடுக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த அல்ட்ரா ஸ்கேன் வெளியில் தனியாரிடம் எடுத்தால் ரூ.2000 செலவாகும்.
இதனால் இங்கு தினமும் 50க்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்கள் வருகின்றனர். கூட்டம் அதிகளவில் வருவதால் மறுநாளும் ஸ்கேன் பார்க்கப்படுகிறது.
ஸ்கேன் எடுக்கும்போது 2 லிட்டர் குடிநீர் குடித்தால் தான் வயிற்று பகுதி ஸ்கேனில் துல்லியமாக பார்க்கமுடியும். ஆனால் இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் வெகு தொலைவிலிருந்து மினரல் வாட்டர் கேன்களை வாங்கி வரும் நிலை உள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் இந்தப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து துருப்பிடித்த இருக்கைகளை மாற்ற வேண்டும்.-