தாசில்தார் மீட்டு கொடுத்த நடை பாதை மீண்டும் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தேனி: தாசில்தார் மீட்டு கொடுத்த நடைபாதை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொம்மையகவுண்டன்பட்டி ராமுத்தாய் தலைமையில் பெண்கள் வழங்கிய மனுவில், ‘தேனி நகராட்சியில் முதல்வார்டில் உள்ள பள்ளிஓடைத்தெருவில் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். வீட்டு வரி, மின் இணைப்பு பெற்றுள்ளோம்.
எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். வருஷநாடு வேல்முருகன், அசோக் உள்ளிடோர் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்தனர்.
கெங்குவார்பட்டி 12வது வார்டு கம்பெனித்தெரு பொதுமக்கள் சார்பாக பாலமுருகன் வழங்கிய மனுவில், ‘எங்கள் பகுதியில் சாக்கடை, ரோடு வசதி கோரி பலமுறை மனு அளித்தும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வில்லை.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என கோரியிருந்தார்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு உப்புத்துறை மருதுபாண்டி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், குடியிருப்பு பகுதியில் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு செய்து தந்தனர். இந்நிலையில் பாதை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பாதையை மீட்டு தர வேண்டும் என கோரினர்.
தேனி பின்னத்தேவன்பட்டிஅருகே உள்ள வடவீரநாயக்கன்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆண்டவர் மனுவில், ‘நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கிறேன்.
வீட்டிற்கான தொகை ரூ.2.11 லட்சம் செலுத்தி விட்டேன். ஆனால், அதிகாரிகள் மேலும் ரூ.50ஆயிரம் கேட்கின்றனர். இதனை வழங்காததால் கிரைய பத்திரம் தர மறுக்கின்றனர்.
இதனால் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. பத்திரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என கோரினார்.
தேனி பகவத்சிங், முத்துவேல், பரமசிவம் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை, நிலங்கள் உள்ளது.
இதற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பாதையை மீட்டு தர வேண்டும் என இருந்தது.