வட்டவடை ஊராட்சியில் காங்கிரஸ் நாளை ‘பந்த்’
மூணாறு : வட்டவடை ஊராட்சியில் ரோடுகள் சீரமைக்காததை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை (மார்ச் 4ல்) ஊராட்சி அளவில் ‘பந்த்’ நடக்க உள்ளது.
மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். அங்கு 2019ல் பெய்த கன மழையில் ஏற்பட்ட மண், நிலச்சரிவு ஆகியவற்றால் வட்டவடை- பழத்தோட்டம், சிலந்தியாறு – சாமியார்விளா, கோவிலூர் – சிலந்தியாறு, கோவிலூர் – கொட்டாக் கொம்பூர் ஆகிய முக்கிய ரோடுகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் சாமியார் விளா, வல்சபட்டி, கூடலார், மூலவள்ளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் ரோடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
அவற்றை சீரமைப்பதற்கு 2023 பிப்.3ல் கேரள அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நிதி ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் ரோடு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பொதுமக்களின் சிரமம் அதிகரித்தது.
இந்நிலையில் ரோடுகள் சீரமைக்காததை கண்டித்து காங்கிரஸ் மண்டல குழு தலைமையில் நாளை வட்டவடை ஊராட்சியில் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை ‘பந்த்’ நடக்கிறது. அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். வட்டவடை ஊராட்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதுண்டு என்பதால், சுற்றுலா பாதிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது