பள்ளியை சுற்றி மண் குவியல்: தேர்வு நேர சிரமத்தில் பிளஸ் 2 மாணவர்கள் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
பெரியகுளம் : ‘பெரியகுளம் வி.நி.அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இன்று 400 க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நிலையில் மண் மேடாக உள்ளது. மாணவர்கள் செல்வதற்கு வழி அமைத்து தரவேண்டும்.’ என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் வி.நி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் இப்பள்ளி மாணவர்கள், எ.புதுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என, 432 மாணவ, மாணவிகள் இன்று (மார்ச் 3ல்) பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் பெரியகுளம் சோத்துப்பாறை ரோட்டில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறையினர் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பள்ளி அருகே சிறுபாலம் அகலப்படுத்தி வடிகால் கட்டுமான பணிக்கு நேற்று முன்தினம் இரவு அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பள்ளியின் இருபுறங்களிலும் தலா 100 மீட்டர் துாரத்திற்கு மண் குவியலாக உள்ளன. இதனால் மாணவர்கள் தேர்வெழுத மண் மீது ஏறி செல்லும் நிலையும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் எவ்வாறு செல்வார்கள் என்பதை கல்வித்துறை விளக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர் கோபிநாத் கூறியதாவது: தேர்வு முடித்த பிறகு பணியை துவங்குங்கள் என நெடுஞ்சாலை துறையினரிடம் தெரிவித்தும், தோண்டி போட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளி தேர்வு மையத்திற்கு வருவதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கிருஷ்ணன், ‘பணி நடக்கும் இடத்தின் அருகே மாணவர்கள் சென்று வர வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன என்றார்.