குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்
தேவதானப்பட்டி: ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி வினோபா நகரில் மழைநீர் செல்லும் வாய்க்கால் தனிநபர் ஆக்கிரமிப்பால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் சிரமப்பட்டனர்.
பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் வினோபாநகர் உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று காலை முதல் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி பகுதியில் மழை பெய்தது. வினோபாநகரில் நீர் செல்லவதற்கு வாய்க்கால் உள்ளது. இதனை சிலர் மண் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இந்தப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் செல்வதற்கு வசதி செய்து தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். அடுத்தகட்ட பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று இந்தப்பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து மக்கள் சிரமப்பட்டனர். பெரியகுளம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.