Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கம்பம் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் 2.5 ஏக்கர் நிலம் வழங்க நீர்வளத் துறை இசைவு நீண்டகால பிரச்னைக்கு தீர்வுக்காண வாய்ப்பு

கம்பம்: கம்பத்தில் தினமும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு நீர்வளத்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்து ரூ.30,100 செலுத்த கோரியுள்ளது.

குப்பைகளை கையாள்வது வருங்காலங்களில் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் 10 ஆண்டுகளுக்கு முன்பே திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மக்கும்,மக்காத குப்பை என பிரித்து கையாழ்கின்றனர். அதேபோன்று சாக்கடை கழிவு நீர் கையாள்வதும் தற்போது தலை வலியாக உருவெடுத்துள்ளது. பாதாள சாக்கடை திட்டம் உள்ள ஊர்களில் பிரச்னை இல்லை.

பாதாள சாக்கடை இல்லாத ஊர்களில் சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரித்து, பாசனம்,தேவைகளுக்கு பயன்படுத்த நகராட்சிகளின் இயக்குனரகம் திட்டம் தயாரித்து அறிவித்தது. அதன்படி கம்பத்தில் தினமும் சேகரமாகும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீர், நகரின் பல பகுதிகளிலிருந்தும் வெளியேறி, ஊருக்கு கிழக்கு பகுதியில் உள்ள வீரப்ப நாயக்கன்குளத்தில் சங்கமமாகிறது.- அக் கழிவு நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதனால் சுற்றுமண சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதை தவிர்க்க தற்போது உத்தேச மதிப்பீடு ரூ 20 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான இடம் வீரப்ப நாயக்கன் குளத்தை ஒட்டியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரில் சேகரமாகும் கழிவு நீர் , இங்குள்ள சுத்திகரிப்பு பிளாண்டில் சுத்திகரித்து பின் பாசனம்,இதர தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நகரில் 5 இடங்களில் இருந்து குழாய்கள் மூலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். சுமார் 5 கி.மீ., நீளத்திற்கு நகருக்குள் இதற்கென குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் கம்பம் நகராட்சி சார்பில் இடம் கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள செயற்பொறியாளர் அலுவலகம், ரூ.5 ஆயிரம் விண்ணப்ப கட்டணம் செலுத்தவும், தொழில் நுட்ப வழிகாட்டுதல் கட்டணம் ரூ.25 ஆயிரம், ரூ.100 க்கான பத்திரம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ரூ.30,100 செலுத்த கம்பம் நகராட்சி கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கம்பம்நகரின் நீண்ட நாள் பிரச்னை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *