போக்கு காட்டும் புலி சிக்காத சிறுத்தையால் பீதி
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் நேற்று முன்தினம் ஒரு ஆட்டை சிறுத்தை தாக்கிக் கொன்றது. தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி – காமக்காபட்டி ரோடு பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் பகுதியில் மார்ச் 5ல் ஆட்டுக் கிடையில் சிறுத்தை, ஆறு ஆடுகளை கடித்துக் கொன்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காமக்காபட்டியில் சிறுத்தை நடமாட்டத்தை விவசாயி மாரிமுத்து பார்த்துள்ளார். அன்று இரவு காமக்காபட்டி – கொடைக்கானல் சாலையில் தங்கப்பாண்டி என்பவர் வீட்டருகே வெளியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.
வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறிய இரு இடங்களில் கேமரா வைத்துள்ளனர். அதேபோல, கேரளா, வண்டிப்பெரியாறு அருகே கிராம்பி குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டத்தை மக்கள் பார்த்தனர். எருமேலி வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரோன் கேமராவில் வீட்டு விலங்குகளை புலி தாக்குவது பதிவானது. இதனால், கூண்டு வைத்துள்ளனர். இரு தினங்களுக்குள் புலியை பிடித்து வனத்தில் விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.