தேர்தலுக்கு முன் தி.மு.க., ஆட்சியை ‘டிஸ்மிஸ் ‘ செய்ய வேண்டும் தேனியில் அர்ஜூன் சம்பத் பேட்டி
தேனி: ‘தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்’ என தேனியில் ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.
தேனியில் ஹிந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டிய போது தமிழக கம்யூ., தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என மக்களிடம் கம்யூ., பீதியை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்திற்கு துரோகம் செய்வதே கம்யூ., கட்சியின் பழக்கம். அக்கட்சிக்கு ஸ்டாலின் துணை போகக்கூடாது.
தமிழகத்தில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு போலீசார் தொடர்ந்து நெருக்கடி தருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பற்றி முகநுாலில் வந்த கருத்தை பகிர்ந்த எங்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். அவரது மகன் இறப்பிற்கு கூட ஜாமின் வழங்க அரசு தடுக்கிறது. கோவையில் குண்டு வைத்த பாட்ஷாவிற்கு போலீஸ் பாதுகாப்புடன் இறுதி சடங்கு நடக்கிறது. இந்த பாரபட்ச பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிக்கிறோம்
தமிழக பட்ஜெட்டில் இலச்சினையை மாற்றியிருப்பது பிரிவினை வாதம் தலை துாக்குவதற்கான அறிகுறி. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இங்கு ஆட்சியாளர்கள் போட்டி ஆட்சி நடத்துகின்றனர். பிரதமரை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயர் மாற்றி துவக்குகின்றனர்
இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.9 லட்சம் கோடி கடன் என கூறப்பட்டுள்ளது. அத்துறையின் செயலாளரோ, ‘மேலும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும்,’ என்கிறார்.
தி.மு.க.,வினர் நடத்தும் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் செல்லும் போது, அரசு மட்டும் எப்படி நஷ்டம் ஆகும்.
டாஸ்மாக் ஊழல், 2 ஜி ஊழலை விட பெரியது. தேர்தலுக்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். டாஸ்மாக் அலுவலகம் முன் இன்று பா.ஜ., நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம். இந்த பட்ஜெட் உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட, மக்கள் விரோத பட்ஜெட். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. தி.மு.க., ஆட்சியில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து ஆட்சிக்கு வருவது சிரமம் என்பதால் எதிலும் ஊழல். தமிழகம் திவாலாகும் நிலையில் உள்ளது.
தேர்தலின் போது ஆட்சியில் இருந்தால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். தேர்தலுக்கு முன் இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சியில் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் ஓட்டிற்கு பணம் கொடுப்பது தவிர்க்கப்படும்,’ என்றார்.