ஆபத்தான மலைப்பாதை வளைவுகளில் விபத்தை தவிர்க்க உருளைத் தடுப்பான்கள்
போடி; போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப் பாதையில் உள்ள ஆபத்தான வளைவுகளில் விபத்தை தவிர்க்க ரூ.80 லட்சம் செலவில் மஞ்சள் நிற உருளைத் தடுப்பான்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக, கேரளா எல்லைப் பகுதியை இணைக்கும் வழித்தடத்தில் குரங்கணி மலைப்பாதை அமைந்து உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நிலையில் பசுமையாக, கண்களை கவரும் நீர் வீழ்ச்சிகளும் உள்ளதால் சுற்றுலா தலமாக திகழ்கிறது.
சினிமா சூட்டிங் ஸ்பாட்கள் அமைந்து உள்ளன. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தினமும் குரங்கணி, கொட்டகுடி சென்று வருகின்றனர்.
முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், டாப் – ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்தவர்கள் தினமும் போடிக்கு வந்து செல்கின்றனர்.
முந்தலில் இருந்து குரங்கணி செல்லும் மலைப் பாதையில் பல இடங்களில் ரோட்டோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் இன்றி பெரும் பள்ளமாக உள்ளது.
சில இடங்களில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இந்த ரோட்டில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
குரங்கணி மலைப் பாதையில் ஆபத்தான வளைவுகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரூ. 80 லட்சம் செலவில் ரப்பரால் உருவாக்கப்பட்ட, இரவு நேரங்களில் தெரியும் வகையில் மஞ்சள் நிற உருளை தடுப்பான்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த இடங்களில் வாகன ஓட்டிகள் அச்சம் இன்றி, சென்று வருகின்றனர்.