தேசிய தடகள போட்டியில் தங்கம் குவித்து தேனி மாணவி சாதனை
தேனி முல்லைநகரைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிரியங்கா கேரளாவில் நடந்த தடகளப்போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.
தேனி முல்லைநகர் பரமராஜ், உஷா தம்பதியின் மகள் பிரியங்கா. செவித்திறன் குறைந்த வாய் பேச இயலாத மாற்றுத்திறன் மாணவியான இவர் ஐ.டி.ஐ., படித்த முடித்து தற்போது தனி தேர்வராக பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சந்திர சேகர்நாயர் ஸ்டேடியத்தில் மார்ச் 26,27,28 ல் தேசிய அளவிலான காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தது.
இந்த போட்டிகளில் 21 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் தேனி மாணவி பிரியங்கா தனி நபர் பிரிவில் 100 மீ., 400 மீ.,ல் தங்கம் வென்றார்.
பெண்கள் பிரிவில் 4×400 மீ., தொடர் ஓட்டம், 4×100 மீ., தொடர் ஓட்டம், கலப்பு பிரிவில் 4×100 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் என 5 தங்கம் வென்றார். அதே போல் 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.
பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டமும் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை பெற்றோர், பயிற்சியாளர்கள் வாழ்த்தினர்.