சர்வதேச கராத்தே, யோகா போட்டி மாணவ, மாணவிகள் சாதனை
கோவாவில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே, யோகாசன போட்டிகளில் கம்பம் மாணவர்கள் 9 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் கோவாவில் சர்வதேச அளவிலான யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
எடை, வயது, பெல்ட் வாரியாக கராத்தே போட்டிகளும், யோகாசனத்தில் 5 பிரிவுகளிலும், ஒற்றை, இரட்டை வரிசை சுருள் வாள், மான்கொம்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிலம்பம் போட்டிகளும் நடந்தன.
இதில் கம்பம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் ரிசப் ஹர்சவர்த்தன், ஹரீஸ்வர், கிருத்திகேஷ், கவுதம், தீபக் தர்சன், பிரித்திகா, தாரணி, யோகாசினி ஆகியோர் கராத்தேவில் தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.
யோகாவில் ஹரீஷ்வா தங்கப்பதக்கம் பெற்றார். தாரணி சிலம்பத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். இதுதவிர பலர் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கராத்தே பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.